டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி மற்றும் வழக்கறிஞர் ஷதான் பரசட் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனுவை தாக்கல் செய்தனர். டெல்லி உயர் நீதிமன்றம் அவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வெளியிட்டு உள்ளதாகவும், வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலாம அமர்வு தெரிவித்தது. விரைவில் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்து இடைக்கால நிவாரணம் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்கக் கோரி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பை வெளியிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், நேற்று (ஏப்.9) இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
மேலும், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விதிகளுக்கு முரணாதாக இல்லை என்றும், அவருக்கு எதிரான தடுப்புக் காவலை சட்டவிரோதமானது எனக் கருத முடியாது என்றும் அமலாக்கத்துறை கைதை சட்ட விதி மீறல் எனக் கூற முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
இதையும் படிங்க : சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழந்து விபத்து: 13 பேர் பலி! - Chhattisgarh Bus Accident