பெங்களுரு: நாடு முழுவதும் ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப்.26) கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.
இதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 இடங்களுக்கு நேற்று (ஏப்.26) மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஹன்பூர் சட்டமன்ற பகுதியின் இண்டிகனாட்டா கிராமத்தில் வாகுப்பதிவு மையம் சூறையாடப்பட்டது.
இந்நிலையில், வன்முறை நடந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் ஏப்ரல் 29ஆம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. வாக்குப்பதிவு மையம் சூறையாடப்பட்டது குறித்து சாம்ராஜ்நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பொது ஆய்வாளர் அளித்த புகாரை தொடர்ந்து மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதியில் உள்ள தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனம் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் புகார் கூறி அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. வாக்குச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
இதையடுத்து அங்கு போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், அந்த வாக்குப்பதிவு மையத்தில் திங்கட்கிழமை மறுதேர்தல் நடத்தப்பட உள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை காட்டிலும் பெங்களூரு மாநகர பகுதியில் வாக்குப்பதிவு சரிந்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்க்கப்பட்டது.
அண்மையில் நடந்த முடிந்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தலின் போது பதிவான வாக்குசதவீதத்தை காட்டிலும் பெரும்பாலான மக்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதில் பெங்களூரு புறநகர் பகுதிகளான மாண்ட்யா, கோலார் தொகுதிகளை காட்டிலும், மத்திய பெங்களூரு, வடக்கு மற்றும் தெற்கு பெங்களூருவில் வாக்குப்பதிவு சதவீதம் மிகக் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பெங்களூருவில் வாக்குப்பதிவு கடும் சரிவு! தேர்தல் ஆணையம் கூறும் காரணம் என்ன? - Lok Sabha Election 2024