பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா சுவாமி. 33 வயதான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு காமக்ஷிபால்யா என்னும் இடத்தில் உள்ள சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேர் இதுவரை கைது செய்யதுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வரும் சூழலில், இந்த கொலை எவ்வளவு கொடூரமாக நடந்திருப்பதென்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
யார் இந்த ரேணுகா சுவாமி? சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சஹானா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி அன்று காணாமல் போன ரேணுகா சுவாமி, பெங்களூருவில் உள்ள ஒரு சாக்கடையில் உடல் ஆங்காங்கே சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக இருவர் கைதாகினர். அவர்களிடம் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில்தான் கன்னட நடிகர் தர்ஷன் சிக்கினார்.
தர்ஷனின் தீவிர ரசிகர்: கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் என சொல்லப்படுகிறது. தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் பழகி வந்துள்ளார். மேலும், பவித்ரா கவுடா தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த தர்ஷனின் மனைவி விஜயலக்ஷ்மி, பவித்ராவுடன் முறையிட்டு சோசியல் மீடியாவில் சில பதிவுகளை போட்டுள்ளார்.
கொலை உறுதி: இந்த நிலையில்தான், தனக்கு பிடித்த நடிகரின் வாழ்க்கையில் பவித்ரா இடையூறு செய்வதை விரும்பாத ரேணுகா சுவாமி, பவித்ராவை திட்டி பதிவிட்டு வந்துள்ளார். இது பவித்ராவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. அதன் பிறகே ரேணுகா சுவாமி சித்ரதுர்காவில் கடத்தப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா உள்ளிட்டோர் கைதாகியிருக்கும் நிலையில், ரேணுகா சுவாமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை: அதன்படி, ரேணுகா சுவாமியின் அந்தரங்க உறுப்பு தாக்கப்பட்டு அதிக ரத்தம் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், வயிற்றில் காயம் உண்டாகி ரத்தம் கசிந்துள்ளது. தலைப் பகுதியில் பலமாக அடி விழுந்துள்ளது. கை, கால், முதுகு மற்றும் மார்பில் ரத்தம் கொட்டியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரேணுகா சுவாமியை அடிக்க பெல்ட் மற்றும் மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உடல் முழுக்க 15 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், அதிக ரத்தப்போக்கு காரணமாகவே ரேணுகா சுவாமி உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், ரேணுகா சுவாமியை சாக்கடையில் வீசிய பிறகு நாய்கள் அவரது உடலின் சில பாகங்களை குதறி தின்றுள்ளன.
முன்னதாக, இவ்வழக்கில் நடிகர் தர்ஷன் கைதாகியிருப்பதால், அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அன்னபூர்ணேஸ்வரி காவல் நிலையம் அருகே குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க காவல் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜூன் 17ஆம் தேதி வரை அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்தை சுற்றி 200 மீட்டர் வரை மக்கள் கூடவோ, போராட்டம் நடத்தவோ, ஊர்வலம் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமண உறவை மீறிய பழக்கம்..? ஆவடி அருகே கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு!