பீகார் : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கீடு செய்யப்படாத அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். விரைவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர் பத்வியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பீகார் மக்களவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் 40 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சிக்கு ஏற்கனவே 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எங்கள் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. நான் மிகுந்த நேர்மையுடன் உழைத்தேன். எங்களுக்கும், எங்கள் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்தார்.