பெங்களூரு : கர்நாடகாவில் ஒயிட் பீல்ட் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில். ப்ரூக் பீல்ட் பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றித் திரிந்த நபரை சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதன் மூலம் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். மேலும், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அறிவியல் பூர்வமான சோதனை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மங்களூருவில் நடந்த குக்கர் வெடி விபத்திற்கு இதற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிசிடிவியில் அடையாளம் தெரியாத நபர் சந்தேகிக்கும் வகையில் தொப்பி, முகக்கவசம் மற்றும் கையில் கேரி பேக்குடன் செல்வது போன்று பதிவாகி உள்ளது.
அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவகத்தில் வெடித்து குண்டு என்பது அதிதீவிரத்தன்மை குறைந்த வகையிலான குண்டு என்றும் அதில் குறிப்பிட்ட மணி நேரத்தில் வெடிக்கும் வகையில் டைமர் பொருத்தப்பட்டு கடையின் கைகழுவும் அறை பகுதியில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதுவே குறிப்பிட்ட நேரத்தில் வெடித்து சிதறியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே தனியார் உணவகத்தில் வெடிவிபத்து நிகழ்ந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : "பெங்களூரு குண்டுவெடிப்பை அரசியலாக்க வேண்டாம்" - கர்நாடக முதல்வர் சித்தராமையா!