புதுடெல்லி: இந்திய விமானச் சட்டம் என்ற சட்டம் பாரதிய வாயுயன் விதேயக் 2024 என்ற பெயரில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துக்கு இந்தி பெயர் சூட்டுவதை விடுத்து ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என்று திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் கே.ராம்மோகன் ராவ் மாநிலங்களவையில் பாரதிய வாயுயன் விதேயக் 2024 சட்டத்தை தாக்கல் செய்தார். சட்டத்தை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் ராம்மோகன் ராவ், "இந்த சட்டம் விமானத்துறையில் வணிக செய்வதை எளிதாக்குகிறது. இந்திய விமானப்போக்குவர்ததில் முதலீடுகளை ஈர்க்கவும் உதவும்,"என்றார்.
#RajyaSabha passes The Bharatiya Vayuyan Vidheyak 2024.#WinterSession2024 @MoCA_GoI @RamMNK pic.twitter.com/Rx9wmk6wXt
— SansadTV (@sansad_tv) December 5, 2024
இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் குறித்து மாநிலங்களவையில் இடம் பெற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் உரையாற்றிய சாகரிகா கோஸ், "ஏன் பல்வேறு சட்டங்களை இந்தி மொழி பெயரில் கொண்டு வருகின்றீர்கள். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு அடையாளமாக இருந்தது. இது இந்தியை திணிப்பதற்கான வழிமுறை,"என்று கூறினார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா முதல்வரானார் தேவேந்திர பட்நாவிஸ்...ஏக்நாத் ஷிண்டே,அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி!
திமுக சார்பில் பேசிய கனிமொழி என்விஎன் சோமு, "இந்த சட்டத்துக்கு விமான சட்டம் 2024 என்றே பெயர் வைக்க வேண்டும். இந்தி படிக்காத மாநிலங்கள் மீது இது போன்ற இந்தி திணிப்பை மேற்கொள்ளக் கூடாது. இந்தி, சமஸ்கிருத மொழிகளில் சட்டத்துக்கு பெயர் சூட்டுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். இதே கருத்தை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி நிரஞ்சன் ரெட்டியும் வலியுறுத்தினார். "இந்தி திணிக்கப்படுகிறது என்று கூறுவது மட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டம் என்று வரும்போது சட்டத்தின் பெயர் ஆங்கிலத்தில் இரு்கக வேண்டும். மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
அனைத்து கட்சிகளின் விவாத த்துக்குப் பின்னர் பாரதிய வாயுயன் விதேயக் 2024 சட்டம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டதால் இந்த சட்டம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே குற்றவியல் நடைமுறை சட்டங்களுக்கும் இந்தியில் பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் அவற்றின் பெயர் மாற்றப்படவில்லை.