டெல்லி: தினக் கூலி தொழிலாளார்கள், டெல்லியில் லோகோ பைலட்டுகளுடன் உரையாடிய வீடியோ துணுக்குகளை ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரிந்துள்ளார். அந்த வீடியோவில் பல தரப்பட்ட மக்கள் தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து ராகுல் காந்தியிடம் கூறுகின்றனர்.
மேலும், நாட்டில் நிலவும் பணவீக்கம், வறுமை குறித்தும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிலைமை எப்படி சிறப்பாக இருந்தது என்பது குறித்தும் மக்கள் பேசுவது அந்த வீடியோவில் இருந்தது. அந்த வீடியோவின் கீழ் ராகுல் காந்தி, "இன்று இந்தியாவில், தினசரி கூலித் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் கடும் நெருக்கடியில் உள்ளனர், சிலர் பணவீக்கம், வேலையின்மை மற்றும் சிலர் அரசாங்கத்தின் அலட்சியத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிகளுக்காகவும் தான் குரல் கொடுப்பேன் என்றும் அது வீதியில் இருந்து நாடாளுமன்றம் வரை சென்று குரல் கொடுப்பேன் என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். மக்கள் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதாகவும், அதை நிறைவேற்ற போராட்டங்களிலும் தான் ஈடுபடுவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் டெல்லி ரயில் நிலையத்தில் லோகோ பைலட்டுகளை சந்தித்த ராகுல் காந்தி, நீண்ட வேலை நேரம், போதிய வசதிகள் செய்து கொடுப்பது இல்லை உள்ளிட்ட காரணங்களை ஊழியர்கள் தன்னிடம் சுட்டிக் காட்டியதாக மத்திய அரசு கடுமையாக விமர்சித்து இருந்தார்.
14 மணி நேரத்திற்கும் மேலாக லோகோ பைலட்டுகள் பணி செய்ய வைக்கப்படுவதாகவும் அதேநேரம் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட லோகோ பைலட்டுகளுக்கு ரயிலில் செய்து கொடுப்பதில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சியில் லோகோ பைலட்டுகளின் வாழ்க்கை தடம் புரண்டு உள்ளதாகவும் அவர்கள் ரயில்வேயின் அக்னீ வீரர்கள் போல் நடத்தப்படுவதாகவும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.