டெல்லி: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல, டெல்லியில் உள்ள திமுக அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, 'கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தோழமை கட்சியான திமுகவினருடன் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவர் இருந்தபோது, பலமுறை அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்தது. அவர் கூறிய அறிவுரைகளையும், ஞான வார்த்தைகளையும் பின்பற்றினால் பயனுள்ளதாக இருக்கும். இந்நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்தை கூறிக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.
அதேபோல செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த தலைவர் இவர். தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழியைக் காத்த பெருமைக்குரியவர். இந்நாளில் இங்கு வந்திருப்பது எனக்கு கிடைத்த பெருமையாக எண்ணுகிறேன்' என்று கூறினார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை முடிவுகள் எண்ணப்படுகின்றன. இதற்கு முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையேயான தேர்தல் முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் சார்பில் அக்கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கருணாநிதி பிறந்தநாள்; சென்னையில் ‘கலைஞர் நினைவிடத்தில்’ மு.க.ஸ்டாலின் மரியாதை! - Karunanidhi Birthday