பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹோலேநரசிபூர் எம்.எல்.ஏ, எச்.டி ரேவண்ணா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, நேற்று (மே.4) எச்.டி ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், ஆபாச வீடியோ வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா விரைவில் சரண்டைய உள்ளதாக மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.எஸ் புட்டராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சிறப்பு புலனாய்வு குழு எச்.டி ரேவண்ணாவை கைது செய்தது.
அவர் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவார் என்று தெரிவித்தார். மேலும், அவர் பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வர உள்ளதாகவும் ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு முன்னிலையில் அவர் சரணடைய உள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரம் பிரஜ்வல் ரேவண்ணா எப்போது இந்தியா வருகிறார், எங்கு சரண்டையை உள்ளார் என்பது குறித்த எந்த தகவலையும் சி.எஸ் புட்டராஜூ வெளியிடவில்லை.
ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து தகவல் தெரிவிக்குமாறு சிறப்பு புலனாய்வு குழு சிபிஐக்கு ப்ளு கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதேநேரம் பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வரும் பட்சத்தில் பெங்களூரு, மங்களூரு அல்லது கோவா ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றில் சரண்டைய வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி ரேவண்ணா மீது அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் பெண்கள் புகார் அளித்த நிலையில், அனைத்து புகார்களையும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எச்.டி ரேவண்ணா தொடர்புடைய நபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை விசாரணைக்கு ஆஜராகாமல் தடுக்க கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த விவகாரத்தில் மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்.டி ரேவண்ணா உதவியாளரின் பண்ணை வீட்டில் இருந்து அந்த பெண் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடத்தல் மற்றும் ஆபாச வீடியோ வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா கைது! - Revanna Anticipatory Bail Dismissed