டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், டெல்லி மக்கள் நச்சு வாயுவை சுவாசித்து வருகின்றனர். லஜ்பத் நகர், கல்காஜி, சாத்தர்பூர், ஜவுனாபூர், கிழக்கு கைலாஷ், சாக்கெட், ரோஹிணி, துவாரகா, பஞ்சாபி பாக், விகாஸ் பூரி, தில்ஷாத் கார்டன், புராரி உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், காற்று மாசுபாடு அளவு 'மிகவும் மோசமான' நிலையை அடைந்தது. ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவல்படி, காலை 7:30 மணி வரை டெல்லியின் சராசரி காற்று தரக் குறியீடு (AQI) 361 ஆக இருந்தது. கடந்த மூன்றாடுகளை ஒப்பிடுகையில், இம்முறையே அதிகம் என தரவுகள் உணர்த்தியிருக்கின்றன.
இந்தியா கேட் வழியாகச் சென்ற சைக்கிள் ஓட்டுநர் ஸ்டீபன், "மாசுபாட்டின் காரணமாக, பயங்கரமான சம்பவங்கள் நடக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு வரை எதுவும் இல்லை, இப்போது என் சகோதரர் நோய்வாய்ப்பட்டுள்ளார். நான் என் சகோதரனுடன் சைக்கிள் ஓட்ட இங்கு வருவேன். ஆனால் அவர் சமீபத்தில் காற்று மாசுபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று, மாசுபாடு மிகவும் அதிகமாக உள்ளது," என்றார்.
நகரங்களில் ஏற்பட்ட காற்று மாசின் அளவீடு:
தலைநகரின் பெரும்பாலான பகுதிகள், 350க்கு மேல் காற்றுத் தரக் குறியீட்டை (AQI) பதிவு செய்துள்ளன. இது குடியிருப்பாளர்களுக்கு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்த வல்லதாகும் என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். காற்று தரக் குறியீடு ஆனது அலிப்பூரில் 353, ஆனந்த் விஹாரில் 395, அசோக் விஹாரில் 387, பவானாவில் 392, புராரி கிராசிங்கில் 395, சாந்தினி சௌக்கில் 395, மதுரா சாலையில் 371, டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் 372, விமான நிலையத்தில் 375, ஐடிஓ-வில் 334, ஜஹாங்கிர்புரியில் 390, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 343, லோதி சாலையில் 314, முண்ட்காவில் 374, நஜஃப்கரில் 329, நேரு நகரில் 385, வடக்கு வளாகத்தில் 390, துவாரகாவில் 352, பஞ்சாபி பக்கில் 392, ஓக்லா ஃபேஸ் இரண்டில் 369, ஷாதிபூரில் 388, சோனியா விஹாரில் 395, ஸ்ரீ அரவிந்தோ மார்க்கில் 314, மற்றும் வாசிர்பூரில் 389 ஆக கணக்கிடப்பட்டது.
இதையும் படிங்க |
அரசின் நடவடிக்கை:
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், தீபாவளிக்குப் பிந்தைய ஏற்பாடுகள் குறித்து பேசினார். "தீபாவளி இரவு டெல்லிக்கும் அதன் மக்களுக்கும் ஒரு முக்கியமான இரவு. மாநிலம் முழுவதும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பட்டாசுகளை எரிப்பதைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்திருந்தார்.
தீபாவளி அன்று டெல்லி தீயணைப்பு சேவைக்கு (DFS) தீ தொடர்பான 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது. இருப்பினும் உயிருக்கு ஆபத்தான எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என அரசு வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்கள் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் புகைமூட்டம் மற்றும் மோசமான காற்றுத் தரம் பல பகுதிகளை பாதித்துள்ளது. மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தரவு குறிப்பிடத்தக்க மாசுபாடு அளவுகளைக் காட்டுகிறது. குறிப்பாக தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் மாறியிருக்கும் காற்றின் தரம், சாத்தியமான உடல்நல பாதிப்புகள் குறித்து கவலைகளை எழுப்பியிருக்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.