ஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நேற்று(பிப்.02) காலமானதாக அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று(பிப்.03) தான் உயிரோடு இருப்பதாக வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூனம் பாண்டே மரண செய்தி விவகாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி வெளியிட்டது. பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எப்படி சமூக வலைத்தளங்களில் நல்ல நிலையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார்?, பூனம் பாண்டே மரணம் தொடர்பான மருத்துவமனை அறிக்கை எங்கே? அவரது சடலம் எங்கே? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தோம்.
இந்நிலையில், பூனம் பாண்டே தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை. ஆனால், இந்த நோய் ஆயிரக்கணக்கான பெண்களை தாக்கி வருகிறது. அதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது. HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகள் மூலம் இதனை தடுக்கலாம். நோயை ஒழிக்க போராடுவோம்" என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன பூனம் பாண்டே, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் என்று பேசியது அவ்வப்போது தனது பெயர் ஊடகங்களில் பேச வேண்டும் என்று ஆபாசமாக புகைப்படம் வெளியிடுவது என பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூனம் பாண்டே மரணம் உண்மையா? விடை தெரியாத கேள்விகள்!