லக்னோ: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் கடைசி மற்றும் 7 ஆவது கட்டமாக இன்று (ஜூன்1) 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு மோடி உட்பட 7 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
இதனால் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மொத்தமுள்ள 1,909 வாக்குச்சாவடிகளுக்கு காலை முதலே வாக்குச்சாவடி அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு வளையத்துக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாரணாசியில் இம்முறை 19,97,577 பேர் தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.
இதில், பெண்கள் 9,13,692 பேரும், ஆண்கள் 10,83,750 பேரும், திருநங்கைகள் 135 பேரும், முதல்முறை வாக்காளர்கள் 37,226 பேரும் அடங்குவர். முதியோர் வாக்காளர்களில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 9,934 பேரும், 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 பேரும் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டை விட இம்முறை வாரணாசியில் 1,43,000 வாக்காளர்கள் கூடுதலாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொகுதி வாரியான வாக்காளர்களைக் கணக்கிட்டால், ரோஹனியா சட்டமன்ற தொகுதியில் 40,18,492 வாக்காளர்களும், வடக்கு சட்டமன்றத்தில் 4,39,685 வாக்காளர்களும், வாரணாசி தெற்கு சட்டமன்றத்தில் 3,17,793 வாக்காளர்களும், கான்ட் சட்டமன்றத்தில் 45,765 மற்றும் சேவாபுரி சட்டமன்றத்தில் 3,55,842 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 1,909 வாக்குச்சாவடிகளில் 34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி என்பதனால் வாரணாசியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 18 மண்டலங்களில் இருந்து மொத்தம் 127 துறை நீதிபதிகள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கடைசி கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, வாரணாசியில் 34 அதி விரைவு அலெர்ட் குழுக்கள், 1,700 மத்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் 800 ஜவான்கள் மற்றும் 12,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, 32 ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த முறை பாஜக வெற்றி அடைந்து மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டுமெனில் வாரணாசியில் அவரது வெற்றி முக்கியம் வாய்ந்தது. அதேபோல, வெற்றி தோல்வியை கடந்து அவருக்கு கிடைக்கும் வாக்கு சதவீதமே மோடியின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: Lok Sabha Election 2024 Phase 7 Live: 9 மணி நிலவரம் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 12.94% வாக்குப்பதிவு