பெங்களூரு: பெங்களூருவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட ரேணுகா சாமி வழக்கு தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த கொலை வழக்கில் கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான தர்ஷன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள அன்னபூணேஸ்வரி காவல் நிலையத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் நடிகர் தர்ஷனின் வட்டாரத்தையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலைக்கு முன் பார்ட்டி: அந்த வகையில் கன்னட காமெடி நடிகர் சிக்கன்னாவும் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளார். ரேணுகா சாமி கொல்லப்படுவதற்கு முன்பு ஆர்.ஆர். நகரில் உள்ள பாரில் நடந்த பார்ட்டிக்கு நடிகர் தர்ஷன் சென்றுள்ளார். அப்போது இவருடன் நடிகர் சிக்கன்னாவும் இருந்துள்ளார். இதன் காரணமாக போலீசார் சிக்கனாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதன்படி அன்னபூணேஸ்வரி காவல் நிலையத்துக்கு வந்த சிக்கன்னாவை போலீசார் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நடிகர் தர்ஷனுடன் சிக்கன்னாவை பார்ட்டி நடந்த பாருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து பாரில் நடந்ததை குறித்து விவரிக்க சொல்லி அதனை வீடியோவாகவும், வரைபடமாகவும் பதிவு செய்துள்ளனர். விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் சிக்கன்னா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சிக்கன்னா பேட்டி: அப்போது அவர், பார்ட்டிக்கு வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்ததால் பாருக்கு சென்றேன். இதுகுறித்து என்னிடம் விசாரிக்க வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் பேரில் விசாரணைக்கு ஆஜராகி நடந்ததை கூறியிருக்கிறேன்.. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்.. இதற்கு மேல் என்னால் எதையும் சொல்ல முடியாது'' எனக்கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, ரேணுகா சாமி கொல்லப்பட்ட பிறகு நடிகர் தர்ஷனை மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்திருந்தனர். அப்போது அவர் போலீசாருக்கு ஒத்துழைப்பு தராமல் அவர்களை சமாதான படுத்த முயற்சித்துள்ளார். இதனால் அந்த இடத்தில் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார் நடிகர் தர்ஷனையும், கைதான மற்றவர்களையும் அங்கு அழைத்து செல்லவுள்ளனர்.
கொலைக்கான தொடக்க புள்ளி?: நடிகர் தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், தர்ஷன் நடிகை பவித்ரா கவுடாவுடன் பழகி வந்துள்ளார். மேலும், தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பவித்ரா கவுடா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அதனை ரேணுகா சாமி விமர்சித்து கமெண்டிட்டு வந்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி நடிகர் தர்சனின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் தனக்கு பிடித்த நடிகரின் திருமண வாழ்க்கையில் பவித்ரா கவுடா குறிக்கிடுவதை விரும்பாத ரேணுகா சாமி கடுமையாக விமர்சித்து சோசியல் மீடியாவில் போஸ்டுகளை போட்டுள்ளார். இது பவித்ராவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. அதன் பிறகே ரேணுகா சுவாமி சித்ரதுர்காவில் கடத்தப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வேறொரு இடத்தில் சடலமாக வீசப்பட்டுள்ளார். இந்த வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 13 பேர் கைதாகி விசாரணை வளையத்துக்குள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.