டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் அவரது மகள் சுரண்யாவுடன் டெல்லியில் உள்ள ஜாங்புரா பகுதியில் வசித்து வருகிறார். ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் ஜனவரி 20ஆம் தேதி, “ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் விரதம் இருப்பதாக” சுரண்யா அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்னதாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவிடப்பட்டிருந்த இந்த பதிவு வைரலானது. இதனையடுத்து ஜாங்புரா பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மணி சங்கர் அய்யர் மற்றும் அவரது மகள் சுரண்யாவுக்கு நோட்டீஸ் அளித்தனர்.
அதில், “குடியிருப்புவாசிகள் மத்தியில் அமைதியைக் குலைக்கும் வகையில் 3 நாள் விரதத்தை அறிவித்துள்ள உங்கள் பேச்சு வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் சென்று அதன் தீர்ப்பை எதிர்த்துப் போராடலாம்.
ஆனால் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடாதீர்கள். ராமர் கோயிலுக்கு எதிராக நீங்கள் செய்த செயல் சரி என நீங்கள் கருதினால், இந்த குடியிருப்பை காலி செய்துவிட்டு, இதுபோல் வெறுப்புப்பேச்சை சகித்துக்கொள்ளும் மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேறுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சுரண்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பாஜக நிர்வாகியுமான அஜய் அகர்வால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுரண்யாவின் பதிவையும் புகாருடன் காவல் நிலையத்தில் அளித்த அஜய் அகர்வால், சுரண்யா மீது டெல்லி காவல்துறை அந்த 36 நிமிட வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு 153-ஏ (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் பகைமையை ஊக்குவிப்பது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரின் மகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.