காசிரங்கா (அசாம்): 2 நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 4 மணியளவில், சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கினார். பின்னர், இன்று அதிகாலை 5.30 மணிக்கு, அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்க தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்குச் சென்றார்.
பின்னர், அங்குள்ள வனவிலங்குகளை பார்வையிட்டு யானை சவாரி செய்தார். இதனைத் தொடர்ந்து ஜீப் சவாரி செய்த அவர், பூங்காவின் இயற்கை அழகை ரசித்தார். பயணத்தின்போது பிரதமர் மோடி சில இயற்கைக் காட்சிகளை கேமராவில் படம் பிடித்து தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர், "இன்று காலை நான் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்தேன். பசுமை போர்வைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமானது, கம்பீரமான ஒரு கொம்பு காண்டாமிருகம் உள்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று, அதன் இயற்கைக் காட்சிகளின் இணையற்ற அழகையும், அசாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். காசிரங்கா பூங்கா உங்களை அசாமின் இதயத்துடன் ஆழமாக இணைக்கும் இடமாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் பயணத் திட்டத்தின்படி, சவாரி முடித்து மதியம் 1.30 மணியளவில் ஜோர்ஹாட் திரும்பும் அவர், ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் 'லச்சித் போர்புகானின்' சிலையைத் திறந்து வைக்கிறார்.
அத்துடன் அருணாச்சலப் பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதை திறப்பு விழாவும் நடைபெறவுள்ளது. பின்னர், அவர் போதாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். அப்போது பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதில் புதியதாக கட்டப்பட்டுள்ள டின்சுகியா மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைப்பது, சிவசாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் திட்டங்களும் அடங்கும். இதனைத் தொடர்ந்து, இன்று இரவு 7 மணிக்கு தன்னுடைய தொகுதியான வாரணாசிக்குச் செல்லும் மோடி, அங்குள்ள விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். மறுநாள் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, உத்தரப் பிரதேசத்தில் 42 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு.. இந்த மாதமே பணிகள் தொடங்கும் என முதலமைச்சர் அறிவிப்பு!