டெல்லி: இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அண்மையில் நடந்த 18வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறை பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து 3வது ஆட்சிக் காலத்தில் முதல் வெளிநாடு சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாடு இன்று முதல் 15ஆம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன்.13) இத்தாலி புறப்பட்டுச் சென்றார். ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் மட்டும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஜி7 மாநாட்டில் செய்ற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா மத்திய தரைக் கடல் பகுதியில் நிலவும் சர்வதேசம் பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கலந்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளார்.
அதன்படி பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசுகிறார். இதேபோல கனடா பிரதமருடனும் இரு தரப்பு உறவு, காலிஸ்தான் விவகாரத்தில் முக்கிய தீர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்தாலி பிரதமர் மெலோனியுடனும் பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
தொடர்ந்து ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு ஜூன் 15ஆம் தேதியே பிரதமர் மோடி இந்திய திரும்ப திட்டமிட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்பு! முதல் கையெழுத்திலேயே பரபரப்பு! - Chandrababu Naidu