குஜராத்: 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளிலும் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அதையடுத்து 26ஆம் தேதி கேரளா உட்பட 13 மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் இன்று குஜராத், அசாம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவானது தற்போது நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவானது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.
இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், டிம்பிள் யாதவ், சுப்ரியா சூலே உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுவதால் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, "இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு பதிவாக வேண்டும். மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ளது. மேலும், சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள்" என தெரிவித்தார்.
முன்னதாக பிரதமரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினரும், ராணுவத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் முன்னே பிரதமரின் வாகனம் நிறுத்திய நிலையில், அங்கிருந்து பிரதமர் மோடி நடந்து வந்தார்.
இதையும் படிங்க: மக்களவை 3ஆம் கட்ட வாக்குப்பதிவு; குஜராத்தில் வாக்களித்த நரேந்திர மோடி, அமித் ஷா! - Lok Sabha Election 3rd Phase