டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாத துவக்கத்தில் சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையின் இந்த மாதத்தின் துவக்கத்தில் (மார்ச் 1) 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.23.50 காசுகள் அதிகரித்து ரூ.1960.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.918.50ஆக இருந்தது.
இந்நிலையில், மார்ச் 8ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.100 குறைக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், “மகளிர் தினத்தையொட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும். குறிப்பாக நாரி சக்திக்குப் பயனளிக்கும்.
சமையல் எரிவாயுவை மலிவான விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களில் வளமான வாழ்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு வாழ்வை இலகுவாக நகர்த்த உதவுகிறது” எனப் பதிவிட்டுள்ளார். 918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் அதிரடியாக ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818.50க்கு விற்பனை செய்யப்பட இருப்பது குடும்பத் தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை? சாதனை தமிழச்சியின் இன்றைய நிலை என்ன?