மண்டி: இன்று விண்வெளி, விமானப்படை, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் பெண்களின் சாதனைகளை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையில் தனக்கான தனி இடத்தைப் பிடித்தவர் சுமன் குமாரி.
இமாச்சலப்பிரதேசம், மண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி. இவரது தந்தை தினேஷ் குமார் தாக்கூர். எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். தாய் மாயா தேவி. சுமன் குமாரிக்கு ஒரு சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.
2019ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கான தேர்வினை இவர் எழுதினார். அதில் தேர்ச்சி பெற்ற இவர் 2021ல் நடைபெற்ற ஆட்சேர்ப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) இணைந்தார். சமீபத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தினமான இன்று (மார்ச் 08) சுமன் குமாரியை நேரில் சந்தித்துப் பேசினோம். அவர் தனது குடும்பத்தைப் பற்றியும், தான் கடந்து வந்த பாதைகள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். "நான் கடந்த 2021ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்தேன் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் எனது அடிப்படை பயிற்சியை முடித்தேன்.
அதன்பின், எனக்கான பிரிவு ஒதுக்கப்பட்டது. தற்போது பஞ்சாப்பில் பணிபுரிந்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் எனது பிரிவில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்படும். இந்த முறை நான் துப்பாக்கி சுடும் பயிற்சியைத் தேர்வு செய்தேன்.
எல்லைக்கு அப்பால் உள்ள துப்பாக்கி தாக்குதல்களின் அச்சுறுத்தலை மனதில் கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட நான் முடிவு செய்தேன். பயிற்சி பெறுபவர்களில் நான் மட்டுமே பெண். எனக்கு எப்போதும் எனது குடும்பம் ஆதரவாக இருந்துள்ளது.
நான் எல்லைப் பாதுகாப்புப் படைக்குத் தேர்வான போது, உன்னால் அதைச் சமாளிக்க முடியாது. அது மிகவும் கடினமான ஒன்று என எனது உறவினர்கள் கூறினர். ஆனால் எனது பெற்றோர் என்னை ஆதரித்தனர். துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறேன் எனக் கூறிய போதும் எனது முடிவைத் தொடர்ந்து ஆதரித்தனர். எனது மகிழ்ச்சியே அவர்களது மகிழ்ச்சி என நினைத்தனர்.
ஸ்னைப்பர் பயிற்சிக்கு உடல் வலிமையை விட மன வலிமை மிகவும் அவசியம். இந்த பயிற்சியின் போது, நிறையச் சவால்களை எதிர்கொண்டேன். சில நேரங்களில் என்னால் சில விஷயங்களைச் செய்ய முடியாமல் போனது. ஆனால் எனது ஆண் சகோதரர்கள் அதனை எளிதில் செய்தார்கள்" என்றார்.
தொடர்ந்து சுமன் குமாரியிடம் மகளிர் தினத்தைப் பற்றிக் கேட்டபோது, "முதலில் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் அவர்கள் செய்யும் தகுதியானவர்கள் என நான் நினைக்கிறேன்.
பெண்கள் அதிகம் பேசப்படாத இந்த ஆண் ஆதிக்கச் சமூகத்தில் பெண்கள் பேசுவது மிக முக்கியம். ஒவ்வொரு பெண்ணும் அவர்களது இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். மேலும், பெற்றோர்களுக்கு நான் கூற விரும்புவது, அவர்களது மகளை ஆதரிக்க வேண்டும். அவர்களின் விருப்பு வெறுப்புகளைக் கேட்டறிந்து அவர்களது இலக்கை நோக்கிச் செல்ல அவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளையராஜா பயோபிக் குறித்துத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!