டெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில், கடந்த செப்டப்பர் 2 ஆம் தேதி மத்திய அரசு உயர்மட்ட குழுவை அமைத்தது.
இந்தக் குழுவில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விரிவான அறிக்கையை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்பட பல்வேறு தரப்பிடம், 191 நாட்களாக ஆலோசனைகளை மேற்கொண்டு, 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் தாக்கம் மற்றும் பலன்கள் குறித்து இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துவது சாத்தியமே. முன்கூட்டியே திட்டமிட்டால் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வழி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகள்:
- ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
- அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் அடையாள அட்டையை தயாரிக்க 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்.
- மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்.
- 2029-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், சட்டமன்றங்களில் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நிதின் கட்காரி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் மீண்டும் போட்டி!