ஹூப்ளி: கர்நடக மாநிலம் ஹூப்ளி அடுத்த பெண்டிகிரி பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவருக்கு கிரிஷ் என்கிற விஷ்வா நீண்ட நாட்களாக காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கிரிஷ் தனது காதலை ஏற்று திருமணம் செய்து கொள்ள மறுத்தால் கொலை செய்து விடுவதாக அஞ்சலியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அஞ்சலி போலீசில் புகார் அளித்துள்ளார். கிரிஷால் தனக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக அஞ்சாலி புகார் அளித்துள்ளார். இருப்பினும் அது குறித்து சட்டை செய்யாத போலீசார் அலட்சியமாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை, அஞ்சலியின் வீட்டிற்கு சென்ற கிரிஷ் தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், அஞ்சலி அதை மறுத்த நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அஞ்சலியை சரமாரியாக குத்திவிட்டு கிரிஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் அஞ்சலி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஞ்சலியின் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அஞ்சலி கொலை வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் கிரிஷை போலீசார் கைது செய்தனர். மேலும், அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தும் அதில் அலட்சியமாக செயல்பட்டதாக பெண்டிகிரி காவல் ஆய்வாளர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி, கல்லூரி வளாகத்தில் வைத்தே கொடூரமாக குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆன நிலையில், மீண்டும் அது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்து இருப்பது கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கல்லூரி வளாகத்தில் வைத்து 21 வயது மாணவி நேஹா ஹெயர்மத் கொல்லப்பட்ட வழக்கில் பயாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் பயாஸ் தார்வத்தில் இருந்து ஹூப்ளி அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுவாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலிடம் டெல்லி போலீஸ் விசாரணை? - Swati Maliwal Attack Case