ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு மத்திய அரசுதான் காரணம் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு முதல் முறையாக சட்டப் பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இரு யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.
கடந்த 18ம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக நேற்று 26 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தலில் 57.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதற்கு, அங்கு இயல்புநிலையை ஏற்பட்டுள்ளதாக காண்பிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு மக்களின் எதிர்வினையே காரணம் என ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி பிரிட்டிஷ்காரரா? பொதுநல வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
பாரமுல்லா மாவட்டத்தின் உரி எல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒமர் அப்துல்லா கூறியதாவது:
"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் அதிக வாக்குப்பதிவு சதவீதத்தை எதிர்பார்த்தேன். ஏனெனில் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எந்த தாக்குதல்களும் இல்லை. வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை.
வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு மத்திய அரசுதான் காரணம். அதிக வாக்குப்பதிவை இயல்பு நிலையின் அறிகுறியாகவும், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டது போலவும் மத்திய அரசு காட்ட முயன்றது.
எனினும் ஸ்ரீநகரின் மக்கள் தவறான சமிக்ஞைகளை தெரிவிக்க விரும்பாததால் இது (வாக்குப்பதிவு சதவீதம் குறைவு) ஸ்ரீநகரின் எதிர்வினையாக இருக்கலாம். காஷ்மீரில் தேர்தல் நடவடிக்கைகளை பார்வையிட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை அழைத்து வந்தது தவறு" என்றார்.
கந்தர்பால் மற்றும் புட்காம் தொகுதி வேட்பாளராக ஒமர் அப்துல்லா போட்டியில் உள்ளார். ஜம்மு - காஷ்மீரில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கு 3-வது மற்றும் இறுதி கட்டமான வரும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்