ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் என்ற பெருமையும் உமர் அப்துல்லாவுக்கு கிடைத்துள்ளது. மேலும், அப்துல்லாவுடன் இணைந்து அமைச்சர்கள் ஐந்து பேர் பதவியேற்றுள்ளனர். இவர்களுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
காஷ்மீரில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 48 எம்எல்ஏக்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்துள்ளது.
இன்று ஜம்முவின் ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், இந்தியா கூட்டணி தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய விஐபி-க்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்று புதிய சரித்திரம் படைத்துள்ள உமர் அப்துல்லாவின் அமைச்சரவை, அனுபவசாலிகளையும், அரசியலில் வளர்ந்து வருபவர்களையும் உள்ளடக்கி, கலவையான குழுவாக உள்ளது. சுரீந்தர் குமார் சௌத்ரி, சகீனா மசூத் போன்ற அரசியல் பிரமுகர்கள் முதல் சதீஷ் சர்மா போன்ற சுயேச்சை வேட்பாளர்களை வரை இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க மறுத்துள்ளது.
உமர் அப்துல்லாவின் அமைச்சரவை
உமர் அப்துல்லா: ஜம்மு காஷ்மீர் முதல்வர்
அரசியல் குடும்பத்தில் பிறந்த உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பாக, 2009 முதல் 2015 வரை 11வது முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் எர் ரஷீத்திடம் தோல்வி அடைந்தார். பின்னர் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில், புட்காம் மற்றும் கந்தர்பால் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அப்துல்லா, முறையே 18,485 மற்றும் 10,574 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சுரிந்தர் குமார் சவுத்ரி: துணை முதல்வர்
உமர் அப்துல்லாவின் மினி-கேபினட்டில் இணைந்துள்ள சுரிந்தர் குமார் சௌத்ரி, ஜம்மு காஷ்மீர் அரசியலில் "ஜெயண்ட் கில்லர்" என்றே அறியப்படுகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவர் பாஜகவின் ரவீந்தர் ரெய்னாவை 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிக பெரிய அளவில் பேசப்பட்டார். கடந்த 1995 இல் தேசிய மாநாட்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சுரிந்தர் குமார் சவுத்ரி, சில காலம் பாஜக மற்றும் பி.டி.பி கட்சிகளில் இணைந்து பின்னர் மீண்டும் தேசிய மாநாட்டில் இணைந்தார். தற்போது அமைச்சரான இவருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
சகீனா மசூத்: அமைச்சர்
உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் இணைந்துள்ள ஒரே பெண் உறுப்பினர் சகீனா மசூத் ஆவார். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் டிஎச் போரா தொகுதியில் போட்டியிட்ட இவர் பிடிபி கட்சியின் வேட்பாளர் குல்சார் அகமது டாரை 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார். இவர் 1994 இல் தனது தந்தை வாலி முகமது படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலுக்கு நுழைந்தார். இவர் கடந்த காலங்களில் எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து அரசியலில் நல்ல அனுபவத்தை கொண்டவர்.
சதீஷ் சர்மா: அமைச்சர்
தேர்தலின்போது காங்கிரசில் இருந்து விலகி சுயேச்சையாக சாம்ப் தொகுதியில் களமிறங்கிய சதீஷ் சர்மா, பாஜக வேட்பாளர் ராஜீவ் சர்மாவை 6,929 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், ஜம்முவில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினருமான மதன் லால் ஷர்மாவின் மகன் ஆவார். அரசியல் வேர்களை நன்கு அறிந்த சதீஷ் சர்மா, உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார் என்றே தெரிகிறது.
ஜாவேத் அகமது தர்: அமைச்சர்
50 வயதாகும் ஜாவேத் அகமதுவுக்கு நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளது. 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் முன்னாள் எம்எல்ஏவும் கூட. தற்போது ராஃபியாபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அப்னி கட்சியின் யாவர் அகமது மிரை 9,202 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் நுழைந்துள்ளார்.
ஜாவேத் அகமது ராணா: அமைச்சர்
பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த ஜாவேத் அகமது ராணா மூன்றாவது முறையாக மெந்தர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி கண்டுள்ளார். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதி பழங்குடியினர் சமூகத்துக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. நடந்தது முடிந்த தேர்தலில், பாஜகவின் முர்தாசா அகமது கானை 14,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தொடர்ந்து, 2002, 2014 மற்றும் 2024 ஆகிய மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக ஜாவேத் அகமது ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜாவேத் அகமது ராணா பி.ஏ., எல்எல்பி பட்டங்களை படித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations to Shri Omar Abdullah Ji on taking oath as the Chief Minister of Jammu and Kashmir. Wishing him the very best in his efforts to serve the people. The Centre will work closely with him and his team for J&K's progress. @OmarAbdullah
— Narendra Modi (@narendramodi) October 16, 2024
பிரதமர் வாழ்த்து: ஜம்மு காஷ்மீருக்கு முதல்வராக பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ''ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்துகள். மக்களுக்கு சேவையாற்றும் அவரது முயற்சிகள் சிறப்பாக அமைய வேண்டும். ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு அவருடனும், அவரது குழுவினருடனும் நெருக்கமாக பணியாற்றும்'' என தெரிவித்துள்ளார்.
My hearty congratulations to Hon’ble @OmarAbdullah on assuming office as the Chief Minister of Jammu and Kashmir!
— M.K.Stalin (@mkstalin) October 16, 2024
Although I received an invitation from @JKNC_ President, Respected Farooq Abdullah, to attend the swearing-in ceremony, due to the ongoing heavy rains in Tamil Nadu… pic.twitter.com/dwYOGUbjps
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: ஜம்மு காஷ்மீ்ரின் முதல்வராக பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வரின் பதிவில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான தங்கை கனிமொழியை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.
இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும், வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!'' என குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்