புதுடெல்லி: 2024ஆம் ஆண்டில் அதிக வெப்ப அலை வீசிய மாநிலங்களில் முதல் மூன்று இடத்தில் ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இது பற்றி தகவல் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், “ஒடிசாவில் இந்த ஆண்டு 37 நாட்கள் வெப்ப அலை வீசியது, கிழக்கு உத்தரபிரதேசத்தில் 33 நாட்கள் வெப்ப அலை வீசியுள்ளது. மேற்கு வங்கத்தில் 31 நாட்கள் வெப்ப அலை வீசியுள்ளது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 554 நாட்கள் வெப்ப அலை வீசியது. கடந்த 2023ஆம் ஆண்டு 230 நாட்களும், 2022ஆம் ஆண்டு 467 நாட்களும் நாடு முழுவதும் வெப்ப அலை வீசியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், உ்ள்ளூர் சுகாதார துறைகளுடன் இணைந்து இந்திய வானிலை மையம் வெப்ப அலை தடுப்பு நடவடிக்கை திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இது போன்ற வெப்ப அலை வீசும் நாட்களில் எவ்வாறு தற்காத்து கொள்வது என்றும் அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. வெப்ப அலை வீசும் நாட்களில் வெயிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய மு.க.ஸ்டாலின்!
இந்திய வானிலை மையம் பல்வேறு முன்னெச்சரிக்கை அறிவுப்புகளை வழங்குகிறது. எச்சரிக்கைகளும் வழங்கப்படுகின்றன. இணையதளம் மூலமாகவும் பொதுவான எச்சரிக்கை மரபு படியும், வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் ஆகியவறறின் மூலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோடைகாலத்துக்கு முன்பாக தேசிய அளவில், மாநில அளவில் வெப்ப அலை வீசும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகின்றன. கனமழை, கடும் பனிப்பொழிவு, வெப்ப அலை வீசுதல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை கணிப்பதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாடுகளில் 40 முதல் 50 சதவிகிதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,"என்று கூறினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு வெப்ப அலை வீசியது. வெப்ப அலையை தமிழ்நாடு அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. இது குறித்து அண்மையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வெப்ப அலை காரணமாக மரணம் அடைவோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.