இந்தூர்: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பெருவாரியான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் வக்களிக்க விரும்பாத பட்சத்தில் அவர்களின் தேர்வாக நோட்டா இருக்கும். அப்படி குறிப்பிட்ட ஒரு தொகுதியில் நோட்டா வெற்றி பெறும் பட்சத்தில் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் வேட்பாளர் வெற்றியாளராக கருதப்படுவார்.
இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் நாட்டிலேயே இந்தூர் தொகுதியில் அதிகளவில் நோட்டாவுக்கு வாக்குகள் விழுந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தூர் மக்களவை தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பீகார் மாநிலத்தின் கோபல்கஞ்ச் தொகுதியில் அதிகளவில் நோட்டாவுக்கு வாக்குகள் பதிவானதே சாதனையாக காணப்பட்ட நிலையில், தற்போதை அந்த சாதனையை இந்தூர் மக்களவை தொகுதி முறியடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கோபல்கஞ்ச் தொகுதியில் 51 ஆயிரத்து 607 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின.
இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் இந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வனி 8 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜான் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் சோலன்கி படுதோல்வி அடைந்தார்.
நோட்டாவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டாலும், அவை செல்லாத வாக்குகளாக கருதப்படுவதால் அவை தேர்தல் நடைமுறையின் முடிவை மாற்றாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. மொத்த செல்லுபடியாகும் வாக்குகளை கணக்கிடுவதற்கு அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை மற்றும் டெபாசிட் பறிமுதல் நிர்ணயம் செய்ய பரிசீலிக்கப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களவை தேர்தல் முடிவுகளில் இழுபறி எதிரொலி: அதானி குழும பங்குகள் திடீர் சரிவு! பின்னணி என்ன? - Adani Shares Tumble