டெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375, விதிவிலக்கு 2-ன் மூலம் திருமண பாலியல் வன்புணர்வு என்பது ‘பாலியல் வன்புணர்வு' என்ற வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதாவது, கணவர் மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், திருமண கட்டாய பாலியல் வன்புணர்வை குற்றமாக்குவதற்கான மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அந்த பிராமணப் பத்திரத்தில், திருமண உறவில் கணவன், மனைவியுடன் கட்டாய உறவில் ஈடுபட்டால் பாலியல் குற்றமாக கருதக்கூடாது என்ற ஐபிசி பிரிவு 375 (2) விதிவிலக்குச் சட்டம் தொடர நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்டம் திருமண உறவைப் பாதுகாக்கும். நீதிமன்றம் இதனை சட்டப் பிரச்னையாக பார்க்காமல், சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும்.
நாகரீகமான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்க இந்திய அரசு உறுதியாக உள்ளது. திருமண உறவுக்குள் நடக்கும் விதிமீறல்களை, வெளியே நடப்பதை வைத்து ஒப்பிட முடியாது. திருமண பந்தத்தில் கணவன் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதையும், வெளியே தெரியாத ஒருவரால் கட்டாயப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படுவதற்கும் வேறுபாடு உண்டு.
ஒரு பெண்ணின் சம்மதம் திருமண பந்தத்தில் அழிக்கப்படாது. இருப்பினும், திருமண உறவில் நடக்கும் பிரச்னைகளுக்கு சட்ட விதிகள் மூலம் நாடாளுமன்றத்தில் பல்வேறு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 354, 354A, 354ப, 498A மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 ஆகியவை போதுமான அளவு தீர்வை வழங்குகின்றன. இதிலும், திருமண உறவில் பெண்களின் உரிமை மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படுகின்றன.
திருமணம் என்பது பரஸ்பர உரிமைகளை உருவாக்கும் ஒரு பந்தம். எனவே, இங்கு ஒப்புதல் என்ற கருத்துடன் ஒப்பிட முடியாது. திருமண உறவில் ஒருவர் விருப்பத்தோடுதான் பாலுறவு நடந்ததா? இல்லையா என்பதை நிரூபிப்பது கடினமானது. எனவே, 'திருமண பாலியல் வன்புணர்வு' என்று பேச்சு வழக்கில் கூறுவது சட்டவிரோதமானது.
இந்த சட்ட விதிவிலக்கு நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டது. திருமண உறவில் இருப்பவர்களின் தேவைகள், உரிமைகளை உணர்ந்து மக்களிடம் இருந்து உருவான ஒரு அமைப்பின் மூலம் பல்வேறு ஆலோசனைகளைக்குப் பிறகே சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது, இந்த விஷயத்திற்கு கடுமையான சட்ட அணுகுமுறையை விட விரிவான சமூக அணுகுமுறை தேவை.
பிரிவு 375 என்பது நன்கு சிந்திக்கப்பட்ட விதியாகும். இது ஒரு ஆண், ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் பாலியல் ரீதியான விவகாரங்களை நான்கு சுவர்களுக்குள் மறைக்க முயற்சிக்கிறது. கணவன் சொந்த மனைவியுடன் வைத்துக்கொள்ளும் உறவை தண்டனைக்குரியதாக மாற்றப்பட்டால் திருமண உறவில் தொலைநோக்கு விளைவை ஏற்படுத்தும்'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்