டெல்லி: நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, புதிய கொள்கைகள் பரிந்துரை, மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வறிக்கை, எதிர்கால திட்டமிடல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை அடக்கிய நிதி ஆயோக் கூட்டம் நாளை (ஜூலை 27) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.
பிரதமரை தலைவராக கொண்ட இந்தக் குழுவில், துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். இந்த நிதி ஆயோக் கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், நாட்டின் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இடம் பெறுவர். இதில் முதலமைச்சர்கள் பங்கு பெறுவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 2025 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை என அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். அது மட்டுமின்றி, எதிர்கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட் பாரபட்சம் காட்டுவதாகவும் தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
குறிப்பாக, பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்துள்ள பீகார் மற்றும் தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்துள்ள ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தங்களது கண்டன பதிவில் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதேநேரம், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் பாணியில் பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு.. நிதி ஆயோக் கூட்டத்தை அடுத்தடுத்து புறக்கணிக்கும் முதல்வர்கள்!