பெங்களூரு : கர்நாடகாவில் ஒயிட் பீல்ட் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்.1) நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில். ப்ரூக் பீல்ட் பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றித் திரிந்த நபரை சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதன் மூலம் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த நபருக்கு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. முக கவசம், தொப்பு அணிந்து சென்ற நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி காடியிலும் கையில் பையுடன் வரும் மர்ம நபர் சிறிது நேரத்திற்கு பின்னர் வெறுங்கையுடன் செல்வது போன்று பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், என்ஐஏ அதிகாரிகளும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு தொடர்பாக முக்கியத் தகவல் கிடைத்து உள்ளதாகவும், மாநில குற்றப்பிரிவு போலீசாரும், என்ஐஏ அதிகாரிகளும் தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : திருமண பரிசு தராத கணவருக்கு கத்திக்குத்து - ஆத்திரத்தில் மனைவி அதிரடி முடிவு!