கின்னூர்: ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 5 சென்றுகொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் நதில் விழுந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்குள்ளான காரில் மூன்று பேர் பயணம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் மாயமான சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தேடி வருகின்றனர். பனிமூட்டம் காரணமாக தேடுதல் பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் திருப்பூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். உள்ளூரில் குதிரை கோபி என்றால் பரிச்சயம். குதிரை வளர்ப்பது, வாங்கி விற்பது போன்றவற்றில் ஆர்வம் உடையவராக இருக்கும் இவர் குதிரை வாங்கி கொடுப்பது மூலம் சைதை துரைசாமி மகன் வெற்றியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு பலமுறை குதிரை வாங்கிக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
கோபிநாத் கின்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹிமாச்சல் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் மாயமான தனது மகன் வெற்றி குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே உள்ள கிராமங்களுக்கு தெரியப்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் குழந்தை பெற அனுமதி கேட்டு வழக்கு: மேற்கத்திய கலாச்சாரம் போல் இல்லை; திருமணம் அவசியம் என நீதிமன்றம் அறிவுரை!