டெல்லி: 18வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 242 இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து மூன்றாவது முறை பிரதமராக மோடி பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன்.9) மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி வழங்கினார். இதை ஏற்றுக் கொண்ட திரெளபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன்.9) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தியா விரைந்துள்ளனர். பாஜக ஆட்சியில் உள்ள மாநில முதலமைச்சர்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்படம், விளையாட்டு, நீதி, மருத்துவம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த பிரபலங்களுக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், நாடாளுமன்ற கட்டுமான பணியான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள், 3ஆம் பாலினத்தவர்களும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர்.
அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான எந்த அழைப்பும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கேசி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனார். அதேநேரம் பதவியேற்பு விழாவில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்காது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தரை முதல் வான்பகுதி வரையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், டெல்லியின் எல்லைகள் மற்றும் போக்குவரத்து சோதனை மையங்களில் தீவிர தணிக்கை நடத்தப்படுகிறது. அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டு தலைவர்கள் தங்க உள்ள விடுதிகளில் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர்களும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடு, ஹரிஷ் பாலயோகி மற்றும் டக்குமுல்லா பிரசாத் ஆகியோரின் பெயர்கள் அமைச்சர் பதவிக்கா பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு! - Sonia Gandhi