நவாடா: பீகாரின் நவாடா மாவட்டத்தில் 21 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம், நவாடா மாவட்டம், முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சி தோலாவில் நேற்று மாலை 15 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நிலப் பிரச்சினை காரணமாக இந்த அசம்பாவிதம் நடைபெற்றிருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நவாடா மாவட்ட ஆட்சியர் ஆசுதோஷ் குமார் வெர்மா கூறுகையில், "வீடுகளுக்கு தீ வைத்ததாக 15 பேரை மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சுமார் 21 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம். இந்த சம்பவத்தில் கால்நடைகள் தீயில் கருகி இறந்தன என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை" என்றார். இச்சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
बिहार के नवादा में महादलित टोला पर दबंगों का आतंक NDA की डबल इंजन सरकार के जंगलराज का एक और प्रमाण है।
— Mallikarjun Kharge (@kharge) September 19, 2024
बेहद निंदनीय है कि करीब 100 दलित घरों में आग लगाई गई, गोलीबारी की गई और रात के अँधेरे में ग़रीब परिवारों का सब कुछ छीन लिया गया।
भाजपा और उसके सहयोगी दलों की दलितों-वंचितों…
நவாடா மாவட்டத்தில் வன்முறைச் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதற்காகவும், தலித்துகள் மீதான அலட்சியப் போக்கிற்காகவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) இரட்டை என்ஜின் ஆட்சிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு மாதம் ரூ. 2100 நிதியுதவி: ஹரியாணா தேர்தலை முன்னிட்டு பாஜக வாக்குறுதி!
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிஹாரின் நவாடாவில் உள்ள மகா தலித் காலனியில் நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதல், என்டிஏ இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் கீழ் காட்டாட்சி நடைபெறுகிறது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. சுமார் 100 தலித் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஏழைக் குடும்பங்கள் வைத்திருந்த அனைத்தும் இரவில் கொள்ளையடிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார். அதிகார பேராசையால் நிதீஷ் குமார் கவலைப்படாமல் உள்ளார். என்டிஏ கூட்டணி கட்சியினரும் வாயடைத்துப் போயுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் நவாடா தீ வைப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நவாடாவில் ஏராளமான ஏழை தலித் மக்களின் வீடுகளை குண்டர்கள் தீயிட்டு எரித்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிய சம்பவம் மிகவும் வருத்தமும், தீவிரமும் கொண்டது. குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு முழு நிதியுதவியை அரசு வழங்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.