டெல்லி: 18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 242 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி வழங்கினார். இதை ஏற்றுக் கொண்ட திரெளபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது முயிசு, வங்காளதேசம் அதிபர் மொஹமட் சகாபுதீன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நடிகர்கள் ரஜினிகாந்த் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.