மும்பை: கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, பாபா சித்திக்கின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான ஜீசன் சித்திக் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகிய இருவரையும் கொலை செய்துவிடுவேன் என்றும், அப்படி அவர்கள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் நாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த அழைப்பு, ஜீசன் சித்திக்கின் பந்தாரா கிழக்கில் உள்ள செய்தித் தொடர்பு அலுவலகத்திற்கு வந்து உள்ளது. எனவே, இது தொடர்பாக ஜீசன் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நிர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், நொய்டாவின் 39 செக்டார் பகுதியைச் சேர்ந்த முகம்மது டயாப் என்ற 20 வயது இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், எந்தவொரு கும்பலும் இந்த மிரட்டல் விடுத்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என முகம்மது டயாப் கூறியதாக மும்பை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதற்கான காரணம் என்ன, எதற்காக சல்மான் கான் மற்றும் அரசியல் பிரமுகரை மட்டும் குறி வைத்து மிரட்டல் விடுத்தனர் என்ற கோணங்களில் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இது போன்ற மிரட்டல் மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு வந்தது. அப்போது, 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர், இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜாம்ஷெத்பூரைச் சேர்ந்த ஷேக் ஹூசைன் ஷேக் மெளசின் என்னும் 24 வயது இளைஞரை மும்பை போலீசார் கைது செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.