டெல்லி: வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் தெரிவிக்க கடந்த 2018ஆம் ஆண்டு சி-விஜில் (CVigil) செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து தேர்தல் தொடர்பான புகார்களை பொது மக்கள் வழங்க முடியும்.
தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக புகைப்படம், வீடியோ உள்ளிட்ட தகவல்களை இந்த செயலியில் பதிவிட்டு அதன் மூலம் பொது மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மேலும், இந்த செயலியில் தனி நபர் ரகசியம் காக்கும் வகையில் பயனர் தனது சுய விவரத்தை மறைத்தும் புகார் அளிக்கலாம்.
இந்த செயலியில் அளிக்கப்படும் புகார்கள் தொடர்பாக 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்தவரின் செல்போன் எண்ணுக்கு அதன் விவரக் குறிப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 939 புகார்கள் பெறப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தவிர 1 லட்சத்து 25 ஆயிரத்து 551 புகார்கள் தீர்க்கப்பட்டதாகவும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 481 புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
388 புகார்கள் குறித்து விசாரித்து வருவதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 71 ஆயிரத்து 168 புகார்கள் பெறப்பட்டதாகவும், தமிழகத்தில் இருந்து ஆயிரத்து 837 புகார்கள் வந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் 13 ஆயிரத்து 921 புகார்களும், ஆந்திர பிரதேசத்தில் 7 ஆயிரத்து 52 புகார்களும் பெறப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. மிசோரம், நாகாலாந்து, லடாக் ஆகிய பகுதிகளில் ஒரு புகார்கள் கூட பெறப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவது ஒட்டுமொத்தமாக 388 புகார்களுக்கு தீர்வு காணப்பட வேண்டிய நிலையில், அதிலும் கேரளா தரப்பில் 239 புகார்கள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 29 புகார்களுக்கு தீர்வு காணப்படாத நிலையில் நிலுவையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
இதையும் படிங்க : ரஷ்யாவில் மருத்துவம் படிக்க ஆசை - பணம் திரட்ட யூடியூப் பார்த்து கடத்தல் நாடகம்! பெண் சிக்கியது எப்படி? - Girl Fake Kidnap In Madhya Pradesh