டெல்லி: மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி, யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
யுபிஎஸ்சி, கடந்த 17ஆம் தேதி அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், இணைச் செயலாளர்கள், இயக்குனர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான லேட்டரல் என்ட்ரி முறை நியமனம் குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. மேலும், அதில் தனியார் துறையைச் சேர்ந்தவர்களை நியமிப்பது குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, அந்த அறிவிப்பில் மேற்கண்ட பதவிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை. இந்நிலையில், அரசியல் சாசனத்தை மீறி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், யுபிஎஸ்சி வெளியிட்டிருந்த அந்த விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சி தலைவர் ப்ரீத்தி சுடானுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங், ''பொது வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது வரலாற்று அநீதிகளை நிவர்த்தி செய்வதற்குத்தான். பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, அது சமூக நீதிக் கட்டமைப்பின் மூலக்கல்லாகும்.
யுபிஎஸ்சி அறிவிப்பில் இடம்பெற்றிருந்த பதவிகள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு, ஒற்றைப் பணியாளர் பதவிகளாக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இருப்பினும், சமூகப் பணியை உறுதி செய்வதில் பிரதமர் கவனம் செலுத்தும் சூழலில், இந்த சிறப்பு பதவிகளின் பணியிடங்களுக்கான அம்சம் மதிப்பாய்வு செய்யப்பட்டு சீர்திருத்தப்பட வேண்டும்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பதில் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். இருப்பினும், ஏற்கனவே லேட்டரல் என்ட்ரி முறை இருந்துள்ளது. முந்தைய அரசாங்கங்களின் கீழ், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) தலைமை போன்ற முக்கியமான பதவிகள், எந்த இட ஒதுக்கீடு செயல்முறையையும் பின்பற்றாமல் லேட்டரல் என்ட்ரி முறையில் நுழைபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன'' எனவும் கூறினார்.
இந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சமூக நீதிக்கு வெற்றி. இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டைக் குறைவான மதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் தன்னிச்சையான 50 சதவீத உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் ஆணை