புதுச்சேரி: பிரதமர் மோடி சாதி, மதம் பெயரை சொல்லியே தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாகவும், அவர் மக்களை ஏமாற்றுவதற்காக நானும் ஓபிஎஸ்சி எனக் கூறிக்கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் விஷ்வ குரு அல்ல; மோடி மௌன குரு எனவும் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், 'பாரதியாரை தந்தது, இந்த புதுச்சேரி மண். கருணாநிதியில் அரசியல் திருப்புமுனையை தந்தது, இம்மண். கருணாநிதிக்கு தமிழகமும், புதுச்சேரியும் ஒன்றுதான் என்றார். புதுச்சேரியை பின்னோக்கி கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. புதுச்சேரி மக்களுக்கு ரேஷன் அரசியை தடை செய்தவர், முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.
எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நெருக்கடி கொடுக்கின்றனர். அதேபோல, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாட்டிகொண்டு முழிக்கிறோம். மாநிலங்களை முனிசிபாலிட்டியாக மாற்றுவதே பாஜகவின் நோக்கம். புதுச்சேரியில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். மாநிலங்கள் டெல்லி அரசுக்கு கீழ் இயங்க வேண்டும் என்பதே பாஜகவின் அஜண்டாவாக உள்ளது. பாஜகவை வீட்டுக்கு அனுப்புவதே இந்தியா கூட்டணியின் (INDIA Alliance) நோக்கம் என்று குற்றம்சாட்டினார்.
- புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கை நீக்கப்படும்.
- ஜிப்மரில் இலவச மருத்துவம், மீண்டும் அங்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
- மன்மோகன் சிங் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை முழு அளவில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக்த்தில் கல்வி, வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்களுக்கு 25% இட ஒதுக்கீடு.
- புதுச்சேரியில் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்
- 'கோயில் நகரம் திட்டம்' மூலம் புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும்
- மூடப்பட்ட ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்
- காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்' என்பன உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை அளித்தார். ஆகவே, மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும் பேசிய அவர், 'மோடி மதம் சாதியின் பெயரால் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. ரங்கசாமி ஆளுதான் உயரம், உயராம இருந்து என்ன புரோயோஜனம். உயரத்துக்கு தகுந்த அறிவு இருக்கணும். வேறு கட்சியைச் சேர்ந்த முதலமைச்சரை தங்கள் சொல் பேச்சைக் கேட்குமாறு பாஜக நிர்பந்தம் செய்கிறது. நமச்சிவாயம் எத்தனைக் கட்சிகள் மாறி உள்ளார் என்று பார்த்தால் எனக்கே தலை சுத்துகிறது.
ரங்கசாமியை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்தவர், நமச்சிவாயம். தற்போது பாஜகவில் போட்டியிடுகிறார். இன்னும் 2 மாதங்களுக்கு பின், நான் புதுச்சேரிக்கு வந்தால் நமச்சிவாயம் எங்கு இருப்பார் என எனக்கே தெரியாது. ஏன் அவருக்கே அது தெரியாது. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கூட்டு பாலியல் தொந்தரவு நடக்கிறது. அதிமுக கூட்டணியை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை, சிம்பிளி வேஸ்ட் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி! - Lok Sabha Election 2024