பலங்கிர்(ஒடிசா): ஒடிசா மாநிலத்தில் 13 வயது சிறுவன் நரபலி கொடுப்பதற்காக கொலை செய்யப்பட்டிருப்பதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஜல்பான்கேல் கிராமத்தை சேர்ந்த தாபான் பிவார் என்பவருடைய மகன் சோம்நாத் பிவார்(13) என்பவர் வியாழக்கிழமை திடீரென்று காணாமல் போனார். சிறுவனின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் பெற்றோர் தேடிப்பார்த்தனர். ஆனால், எங்குமே அவரைக் காணவில்லை. பெற்றோருடன் சேர்ந்து கிராமத்தினரும் ஊர் முழுவதும் சிறுவனைத் தேடினர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இதனிடையே மகனை கண்டுபிடித்துத் தருமாறு உள்ளூர் போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காணாமல் போன சிறுவனின் உடல் ஜாலியாலிட்டி கிராமத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார், தடயவியல் நிபுணர்கள் சிறுவன் உடல் கிடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சிறுவனின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறினர். அழுகைக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தந்தை தாபான் பிவார்,"எனது மகன் நரபலி கொடுப்பதற்காக கொல்லப்பட்டுள்ளார். நரபலிதான் என்பது உறுதியாகத் தெரியவந்துள்ளது. பவுர்ணமி என்பதால் என் மகனை பலி கொடுக்க யாரோ முயற்சி செய்திருக்கின்றனர். என் மகனை உயிரோடு புதைக்க முயன்றிருக்கின்றனர். ஆனால், புதைக்காமல் விட்டு விட்டனர்," என்று கூறினார்.
இதையும் படிங்க : ஒடிஷாவில் பயங்கரம்: 14 வயது சிறுவன் நரபலி? - பெண் சாமியார் உள்பட 4 பேர் கைது!
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நுவாபடா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வழக்கின் விசாரணை குறித்து பேசிய சதானந்தா பூஜாரி, "சிறுவன் காணாமல் போனது குறித்து பெற்றோர் புகார் செய்திருக்கின்றனர். சந்தேகத்துக்கு இடமான ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றோம். இந்த விவகாரம் இரண்டு குடும்பங்களுக்குள் நேர்ந்த விரோத மனப்பான்மையால் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் பெற்றோர் கூறும் நரபலி குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளோம்,"என்றார்.
இந்த நாகரீக காலத்திலும் மனித உயிர்களை பலிகொடுக்கும் நபரலி சம்பவங்கள் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் உத்தபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பள்ளி சிறுவனை நரபலி கொடுத்தாக பள்ளியின் உரிமையாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதே போல சில மாதங்களுக்கு முன்பு அம்பாலா பகுதியில் கடையின் உரிமையாளரை பெண் ஒருவர் நரபலி கொடுத்ததாக செய்திகள் வெளியானது.
கடந்த ஆண்டு ஒடிசாவில் அங்குல் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக பாரம்பரிய மருத்துவம் செய்யும் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவலின்படி 2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 103 நரபலி சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் அதிக பட்சமாக 14 பேர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் 13 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 11 பேரும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்