டெல்லி: கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் கொலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று மாநிலங்களவையில் மதிமுக எம்பி வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான வைகோ இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. இன்றைக்கும் கூட 22 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்வதை இலங்கைக் கடற்படை பொழுதுபோக்காக செய்து வருகிறது.
கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், கடற்படை ஆணையினைச் செயல்படுத்தும் சிங்கள மீனவர்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. இலங்கை கடற்படையினரால் இவ்வளவு துயரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகிறார்கள் என்றால் அவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் இந்திய குடிமக்களாக இந்த நாடு கருதுமேயானால் இந்த கொடுமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது நமது இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்களிடம் இன்றைய போட்டியில் இலங்கை தோற்றுவிட்டால் உங்கள் தலைகளை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் போட்டியில் இலங்கை தோற்று, இந்தியா வெற்றி பெற்றது. அன்றே, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொலை செய்தது.
தற்போது 85 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார்.ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று குற்றச்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய பிரதமர் நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து இந்த மோடி அரசு பாதகம் செய்கிறது. இந்த நிலைமை தொடர்ந்துகொண்டே இருந்தால், தமிழக மீனவர்களின் இளம் தலைமுறையினரிடம் இந்தியா மீது வெறுப்பு உருவாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வைகோ தமது பேச்சை முடிக்கும் முன்னரே அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும், வைகோ சில நிமிடங்கள் தொடர்ந்து தமது கருத்தை முன்வைத்தார். இந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என சபாநாயகர் தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தொடரும் வன்முறை.. ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சம்.. வீடுகளில் புகுந்து ஆடைகள் திருட்டு! - bangladesh riots update