போபால் (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், ஜஹாங்கிராபாத் பகுதியில் ஃ பராஸ் என்ற அந்த இளைஞர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பி.எஸ்சி பட்டதாரியான அவர், வேலை கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
வேலையில்லாத விரக்தியில் இருந்து வந்த இளைஞரை, அவரது குடும்பத்தினர் கேலி, கிண்டல் செய்து வந்ததுடன், சீக்கிரம் ஒரு வேலையை தேடிக் கொள்ளும்படி ஃபராஸை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே மனஅழுத்தத்தில் இருந்த அவர், குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தால் ஆத்திரமடைந்துள்ளார். அந்த ஆத்திரம் கண்ணை மறைக்கவே, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரியின் மூன்று வயது மகளின் தொண்டைக்குழியில் கத்தியால் குத்தி அச்சிறுமியை கொன்றுள்ளார்.
ஞாயிறுக்கிழமை (செப்.1) இரவு 10 மணியளவில் நடைபெற்ற இக்கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்த ஜஹாங்கிராபாத் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து, ஃபராஸை கைது செய்ததுடன், அவரை தங்களது காவலில் எடுத்து சிறுமியின் படுகொலை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்று துணை காவல் கண்காணிப்பாளர் பிரியங்கா சுக்லா செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டத்தின் 103(1), 296, 353 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்னர்.
இதையும் படிங்க: தாய் மடியில் இருந்த குழந்தையை கவ்விக் கொன்ற ஓநாய்கள்... தூக்கமின்றி தவிக்கும் கிராமங்கள்!