புனே : மகாராஷ்டிரா மாநிலம் புனே, சிஞ்சுவாட் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கேண்டினுக்கு கேட்டலிஸ்ட் சர்வீஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் உணவு சப்ளை செய்து வருகிறது. அதேபோல் மனோகர் என்டர்பிரைசஸ் என்ற மற்றொரு நிறுவனம் துணை ஒப்பந்த அடிப்படையில் சமோசாக்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில், மனோகர் என்டர்பிரைசஸ் நிறுவனம் வழங்கிய சமோசாக்களில் ஆணுறை, குட்கா, கற்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து உள்ளனர். இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கேண்டினுக்கு எஸ்ஆர்ஏ என்ற நிறுவனம் உணவு பொருட்களை விநியோகித்து வந்து உள்ளது.
இந்த நிறுவனம் வழங்கிய உணவில் பேண்டேஜ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் ஆட்டோமொபைல் நிறுவனம் எஸ்ஆர்ஏ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளது. இதையடுத்து மனோகர் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சமோசா வழங்கும் ஆர்டடை தனியார் ஆட்டோமொபைல் நிறுவனம் வழங்கி உள்ளது.
இந்நிலையில், தொழில் போட்டி காரணமாக எஸ்ஆர்ஏ நிறுவனத்தின் உரிமையாளர்களான ரஹீம் ஷேக், அசார் ஷேக், மற்றும் மஜர் ஷேக் ஆகிய மூன்று பேர் உள்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரஹீம் ஷேக், அசார் ஷேக், மற்றும் மஜர் ஷேக் ஆகிய மூன்று பேரும் மனோகர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெயரை கெடுக்க இரண்டு ஊழியர்களை அனுப்பி இந்த காரியத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - Arvind Kejriwal Petiton Dismissed