டெல்லி: நாட்டில் 18வது மக்களவைத் தேர்தல் திருவிழா முடிவு பெறும் தருவாயில் உள்ளது. அந்த வகையில், இன்று (மே 25) ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்படி, பீகார், ஜார்கண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ராஜோரி தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இவ்வாறு நடைபெறும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 5.48 கோடி ஆண் வாக்காளர்கள், 5.29 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 5,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடன் தயார் நிலையில் உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
6-ம் கட்ட வாக்குப்பதிவு தொகுதிகள்: பீகாரில் வால்மீகி நகர், வைஷாலி உள்பட 8 மக்களவைத் தொகுதிகள், ஹரியானாவில் அம்பாலா, ஹிசார், சோனிபட் உள்பட 10 தொகுதிகள், ஜார்கண்டில் ராஞ்சி மற்றும் ஜாம்ஷெத்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல், ஒடிசாவில் சம்பல்பூர், கட்டாக் உள்ளிட்ட 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் நகர், சரஸ்வதி உள்பட 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் பங்குரா உள்பட 8 தொகுதிகள், டெல்லியில் உள்ள அனைத்து 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், ஜம்மு மற்றும் மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார். மேலும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: 'இனியும் என் பொறுமையைச் சோதிக்காதே'.. பேரனை எச்சரிக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா! - Deve Gowda To PRAJWAL REVANNA