டெல்லி: நாடு முழுவதும் 4ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. ஆந்திர பிரதேசம், தெலங்கானா, பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று (மே.11) மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
ஆந்திரா, தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (மே.13) மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இது தவிர ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 175 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
மே 13ஆம் தேதி 4வது கட்டமாக 96 மக்களவை தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் ஏறத்தாழ ஆயிரத்து 717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளும், தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
நட்சத்திர வேட்பாளர்களும், தொகுதிகளும்:
உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவை தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். கன்னோஜ் தொகுதியில் முதலில் அகிலேஷ் யாதவின் மருமகன் தேஞ் பிரதாப் யாதவ் போட்டியிட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அகிலேஷ் யாதவ் களமிறங்கினார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் கன்னோஜ் தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக காணப்பட்ட நிலையில், கடந்த 2019ஆம் அண்டு அங்கு பாஜக வெற்றி கொடி நாட்டியது, மீண்டும் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் கொடி பறக்குமா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் தெரியவரும்.
மேற்கு வங்கம் மாநிலம் பஹ்ரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரபல கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை களமிறக்கி உள்ளது. அதேபோல் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மஹுவா மொய்த்ரா போட்டியிடுகிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட மஹுவா மொய்த்ரா 6 லட்சத்து 14 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை அதே கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் மஹுவா மொய்த்ரா போட்டியிடுகிறார்.
அதைத் தொடர்ந்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத்தில் நின்று வெற்றி பெற்று வருகிறார். அதேபோல் 25 மக்களவை தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேச மாநிலத்தில் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
இதில் கடப்பா தொகுதியில் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் அவினாஷ் ரெட்டி போட்டியிடுகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் எதிரெதிரே போட்டியிடுவதால் கடப்பா தொகுதி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
மாநில வாரியாக எத்தனை தொகுதிகளில் தேர்தல்:
ஆந்திர பிரதேசத்தில் 25 தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், பீகாரில் 5 மக்களவை தொகுதிகள், ஜார்கண்டில் 4 இடங்கள், மத்திய பிரதேசத்தில் 8 இடங்கள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் 4 இடங்கள், உத்தர பிரதேசத்தில் 13 மக்களவை தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு மக்களவை தொகுதி என மொத்தம் 96 மக்களவை தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று (மே.11) மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவு முடியும் வரை நேரடியாகவோ, சமூக வலைதளங்கள் மூலமோ, சுவரொட்டிகள், வானொலி வாயிலாகவோ தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கருப்பு பண விவகாரம்: அதானி, அம்பானி மீது ஏன் நடவடிக்கை இல்லை? - மல்லிகார்ஜுன கார்கே! - Lok Sabha Election 2024