பெய்ரூட்: லெபனானில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பேஜர் சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 2,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மறுநாளே அதாவது நேற்று இரவு மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை பெய்ரூட் மற்றும் லெபனானின் பல பகுதிகளில் வாக்கி-டாக்கிகள், சோலார் கருவிகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 450 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தியுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக இரு தரப்புக்கும் இடையே நிலவும் மோதல் போக்கானது போராக மூளும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மேலும் தாக்குதல் திட்டங்களை வகுத்துள்ளதாகவும், தாக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறுகையில், "ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் வேலை செய்கிறோம். அடுத்த இரண்டு வலுவான தாக்குதல் திட்டங்கள் தயாராக உள்ளன. ஒவ்வொரு தாக்குதலிலும், ஹிஸ்புல்லா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: உணவுக்காக 200 யானைகளைக் கொல்ல திட்டம்.. கடும் வறட்சியில் தவிக்கும் ஜிம்பாப்வே!
இதேபோல், ஹிஸ்புல்லா அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவர் ஹாஷிம் சஃபிதீன் கூறுகையில், "பேஜர் சாதன தாக்குதலுக்கு எங்கள் குழு இஸ்ரேலுக்கு சிறப்புத் தண்டனையை பதிலடியாக கொடுக்கும்" என தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்ஃபோன்கள் அவற்றை பயன்படுத்துவோரின் இருப்பிடத்தை எளிதாக காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினர், எதிரிகள் தங்களை கண்காணிப்பதை மிகவும் சவாலாக்கும் வகையில் தகவல் தொடர்புகளுக்கு பேஜர் சாதனங்களை பயன்படுத்தினர். இந்நிலையில் இஸ்ரேல் உளவுத்துறையானது, ஹிஸ்புல்லாக்களுக்கு பேஜர் சாதனங்களை விநியோகிக்கும் நிறுவனம் வழியாக தற்போதைய தாக்குதலை நிகழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் போர்த் தொடுத்த நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானிலிருந்து இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடியாக தற்போது ஹிஸ்புல்லாக்களை குறி வைத்து இஸ்ரேல் பேஜர், வாக்கி-டாக்கி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வெடிக்கச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.