கோட்டா (ராஜஸ்தான்): ராஜஸ்தானில் போட்டி தேர்வுகளுகு தயார் செய்து வந்த 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பொறியியல் படிப்பின் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ (JEE) தேர்விற்காக தாயாராகிக் கொண்டிருந்து உள்ளார். இந்த நிலையில், போட்டித் தேர்வு குறித்த அச்சத்தாலும், மன அழுத்தத்தினாலும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள போர்கேடா பகுதியைச் சேர்ந்தவர் மாணவி நிஹாரிக்கா சிங் (வயது 18). இவர் தனது வீட்டில் இறந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவியை மீட்ட பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து மருத்துவமனை வந்த போர்கேடா போலீசார் சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவி நிஹாரிக்கா உடலுடன் அவரது அறையில் இருந்து கிடைத்த கடிதத்தையும் மீட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த கடிதத்தில், "அம்மா, அப்பா என்னால் ஜே.இ.இ (JEE) எழுத முடியாது.
அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் தோல்வியுற்றவள். நான் நல்ல மகள் அல்ல. அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கிருக்கும் ஒரே வழி இதுமட்டும் தான்" என எழுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போர்கேடா காவல் நிலைய அதிகாரி ஜிதேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், "இந்த சம்பவம் இன்று (ஜன.29) காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
மாணவி நிஹாரிக்காவின் பெற்றோர் கூறியது போல, நாளை (ஜன. 30) நடைபெற இருக்கும் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ தேர்விற்காக இவர் தாயாராகிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு 12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதால், நிஹாரிக்கா பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மாணவி நிஹாரிகா தனது மதிப்பெண்களை அதிகப்படுத்துவதற்காக 12ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் போதே, JEE தேர்வுக்கும் தயாராகிக் கொண்டு இருந்தாதாக அவரது உறவினரான விக்ரம் சிங் தெரிவித்துள்ளார். எனவே, மாணவி தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை போட்டித் தேர்வை எதிர்கொள்ள கடுமையாக படித்து வந்துள்ளது தெரிகிறது.
நிஹாரிக்காவின் தற்கொலையைப் போலவே கோட்டாவில் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், இந்த மாதம் 23ஆம் தேதி கோட்டாவில் உள்ள விடுதி ஒன்றில், முகமது சய்யத் என்ற 19 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தயாராவதற்காக, உ.பி மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் இருந்து கோட்டாவுக்கு ஓராண்டுக்கு முன் வந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வைரலாகும் டெய்லர் ஸ்விஃப்ட் டீப் பேக் புகைப்படங்கள்; சர்ச் செய்வதைத் தடுத்த X தளம்!