திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு ஏற்பட்ட பாலியல் நெருங்கடி, குற்றச்சாட்டு சம்பந்தமாக , ஓய்வுபெற்ற நீதிபதி ஹோமா தலைமையிலான குழு, விசாரணை நடத்திய அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களது ஏற்பட்ட துன்புறுத்தல்களைப் பற்றி புகாராகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஒருவர், நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லம் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தனது சமுக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "நடிகர் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, இடைவேல பாபு (Idavela Babu), சந்திரசேகரன், புரொடக்ஷன் கன்ரோலைச் சேர்ந்த நோபிள் மற்றும் விச்சு ஆகியோர் என்னை பாலியல் ரீதியாகவும், வார்த்தைகள் ரீதியாகவும் துன்புறுத்தினார்கள்.
2013-ம் ஆண்டில் ஒரு படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, இந்த நபர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானேன். என்னால் முடிந்தவரை நான் பொறுத்துப் பார்த்தேன், ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் முடியவில்லை. அதனால், மலையாள திரையுலகத்திலிருந்து வெளியேறி, சென்னைக்கு குடியேறிவிட்டேன்" என தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடிகர் முகேஷ் மீது 354வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.
தன் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கும் முகேஷ், இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,"பொதுத் தளத்தில் விவாதிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும். அதற்கு நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை முக்கியமானது. ஒரு நடிகராகவும், ஒரு பொதுமக்களின் பிரதிநிதியாகவும், சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த பொறுப்பு உள்ளது. செழுமையான நாடக பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த நான், கலைத்துறையில் இருப்பவர்களின் வலி மற்றும் கவலைகளைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவன்.
அரசியல் ரீதியாகக் குறிவைக்க முயல்பவர்களிடம் எனக்கு எந்த கவலையும் இல்லை. இதே போல் 2018 ஆம் ஆண்டு என் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது, அதை பொதுமக்கள் நிராகரித்தனர். சட்டரீதியாக இதை எதிர்கொண்டு உண்மை என்ன என்பதை வெளியில் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை முனீர் தன்னிடம் பணம் கேட்டார் அதனைத் தர மறுத்த காரணத்தால்தான் இது போன்ற செய்து வருகிறார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த மோகன்லால்!