பெங்களூரு (கர்நாடகா): பெங்களூரு வைட் ஃபீல்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், இன்று (மார்ச் 1) மர்மமான முறையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஹோட்டல் ஊழியர் ஃபரூக் (19), அமேசான் நிறுவன ஊழியர் தீபன்ஷு (23), ஸ்வர்ணாம்பா (49), மோகன் (41), நாகஸ்ரீ (35), மோமி (30), பலராம கிருஷ்ணன் (31), நவ்யா (25) மற்றும் ஸ்ரீநிவாஸ் (67) ஆகிய 9 பேரும் படுகாயம் அடைந்ததாகவும், அதில் 49 வயதான ஸ்வர்ணாம்பா 50 சதவிகிதம் தீக்காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பெங்களூரு மாவட்ட மாநகர காவல் ஆணையர் தயானந்தா, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து என்ஐஏ, எஃப்எஸ்எல் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிடுவார். மேலும், உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில், உணவகத்தில் யாரோ பையை வைத்துவிட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. ஆகவே, இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறும்போது, "ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரிடம் பேசியதாகவும், இது சிலிண்டர் வெடிப்பால் ஏற்பட்ட வெடிவிபத்து அல்ல என்று அவர் கூறியதாகவும், ஆகையால், ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த வெடிவிபத்து வெடிகுண்டு வெடித்தது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாது, இந்த சம்பவம் குறித்து முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு முழு தகவலும் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், எப்எஸ்எல் குழுவிடம் இருந்தும் கருத்துகள் பெற்று விசாரணை நடைபெறும்" என்று கர்நாடக காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) அலோக் மோகன் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, பெங்களூரு காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) குழுவும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே யாருடையது? அப்துல் கலாமுக்கு உள்ள தொடர்பு!