டெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றார். கபில் சிபல் மொத்தம் ஆயிரத்து 66 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராயை தோற்கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு சீனியர் வழக்கறிஞரான பிரதீப் ராய் 689 வாக்குகள் பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 8ஆம் தேதி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட போவதாக கபில் சிபல் அறிவித்து இருந்தார். அவரை எதிர்த்து தற்போது பார் அசோசியேஷன் தலைவராக இருக்கும் ஆதிஷ் அகர்வலா, பிரியா ஹிங்கோரனி உள்ளிட்டோரும் போட்டியிட்டனர். இருப்பினும் கபில் சிபல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கபில் சிபல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது 4வது முறையாகும்.
ஹார்வார்டு சட்ட பள்ளியில் பட்டம் பெற்ற கபில் சிபல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக 1989-90 காலக் கடத்தில் பதவி வகித்தார். ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2001 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்க தலைவர் பொறுப்பை கபில் சிபல் வகித்தார். இந்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலில் கபில் சிபல் வெற்றி பெற்றதை காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள சங்க தேர்தலில் அமோக வெற்றியை கபில் சிபல் பதிவு செய்துள்ளார்.
கபில் சிபிலின் இந்த வெற்றி தாராளவாத, மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும். விரைவில் வெளியெற போகும் பிரதமரின் வார்த்தையில் சொல்வது என்றால், தேசிய அளவில் வரப்போகும் மாற்றத்திற்கான ஒரு டிரெய்லர் தான் இது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு - மம்தா பானர்ஜி இரங்கல்! - West Bengal Lightning Death