ஜார்க்கண்ட்: ஜாா்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அபகரித்துக் கொண்டதாக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோரன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் தற்போது பிர்சா முண்டா சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 13ஆம் தேதி தள்ளி வைத்திருந்தது.
#WATCH | Sweets being distributed at the residence of former Jharkhand Chief Minister Hemant Soren in Ranchi after he was granted bail by Jharkhand High Court in land scam case. pic.twitter.com/20FuAbk9rS
— ANI (@ANI) June 28, 2024
இந்த நிலையில், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, ஹேமந்த் சோரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அருணாப் சவுத்ரி மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் எஸ்வி ராஜூ ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அப்போது, ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்தால், அவர் இதே போன்ற குற்றத்தைச் செய்வார் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவருக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சோரன் தரப்பு மூத்த வழக்கறிஞர் அருனாப் சவுத்ரி, “சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் தொடர்புடைய குற்ற வழக்கில் சோரன் முதன்மை குற்றவாளி அல்ல என்றும், ஜாமீனில் இருக்கும்போது மனுதாரர் குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு ஜாமீன்களின் கதை... கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது ஹேமந்த் சோரனுக்கு கிடைக்காமல் போனது எப்படி?