ஐதராபாத் : தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எதிர்வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிசை செளந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கினார்.
இதையடுத்து தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தெலங்கானா ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.20) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்டோ பங்கேற்றனர். முன்னாள் மக்களவை உறுப்பினராக சிபி ராதாகிருஷ்ணன், தெலங்கானா மாநிலத்தின் மூன்றாவது ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி தனி மாநிலமாக தெலங்கானா உதயமானதில் இருந்து இதுவரை இஎஸ்எல் நரசிம்ஹன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் ஆளுநராக பதவி வகித்து வந்து உள்ளனர். தற்போது கூடுதல் பொறுப்பாக சிபி ராதாகிருஷ்ணன் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்று உள்ளார். இதில் கூடுதல் சிறப்புமிக்க தகவல் என்னவென்றால் இவர்கள் மூன்று பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்: 7வது ஆண்டாக பின்லாந்து முதலிடம்! இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?