டெல்லி: பணமோசடி, நிலக்கரி சுரங்கம் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, இம்மாதத்தின் இறுதிக்குள் (ஜன.31) ஆஜராக வேண்டும் எனவும், இல்லையெனில், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமலாக்கத்துறை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து விசாரணைக்கு ஆஜராகமாறு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், டெல்லியில் உள்ள ஜார்கண்ட் முதலமைச்சர் வீட்டில் அனைத்து ஊழியர்களின் மொபைல் போன்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் தலைமைச் செயலாளர் எல்.கியாங்டே அனைத்து முதன்மை செயலாளர்கள் மற்றும் பிற செயலாளர்களுக்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜன.20ஆம் தேதி நில மோசடி வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் சோரனின் ராஞ்சி இல்லத்தில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணிநேரம் வரை விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே ஹேமந்த் சோரனுக்கு 10 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஞ்சி பகுதியில் உள்ள பாரியாடு பகுதியில் அமைந்துள்ள நிலம் தொடர்பாக முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 12 மனைகளை கொண்ட 8.46 ஏக்கர் நிலத்தில் ஏப்ரல் 13, 2023 அன்று சோதனை நடத்தியது.
இது தொடர்பாக, அப்போதைய துணை வருவாய் ஆய்வாளர் பானு பிரதாப் பிரசாத் வீட்டிலும் இது சம்பந்தமாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து, 2023, மே மாதம் ராஞ்சி சதர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலால் வலுவடையும் இந்திய சுற்றுலாத் துறை! பில்லியன் பொருளாதாரத்தை எதிர்நோக்கும் உத்தர பிரதேசம்!